திருவண்ணாமலை, ஏப். 29- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கருந்துவாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு அருகில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கருந்துவாம்பாடி கிராமத்திற்கு அருகே, கொளக்கரவாடி, சீலப்பந்தல், புதுமனை, பழைய மண்ணை உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் கருந்துவாம்பாடிக்கு அருகே உள்ள மல்லவாடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அங்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஆண்டு, அந்த மல்லவாடி பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை?. எனவே விவசாயிகளின் நலன் கருதி, விவசாய சாகுபடியை பாதுகாக்கும் பொருட்டு, கருந்துவாம்பாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு சங்க நிர்வாகிகள் எஸ்.பலராமன், பன்னீர் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.