திருவண்ணாமலை, டிச. 10- திருவண்ணாமலை தாலுகா, கீழ் நாச்சிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்த மக்களுக்கு கடந்த 1966 ஆம் ஆண்டு தமிழக அரசு வீட்டு மனை பட்டா வழங்கியது.
அதில் வீடு கட்டி பல தலைமுறைகளாக வசித்து வந்த ராஜேந்திரன், ராமன், பவன் குமார், முருகன், பரணி, முனியப்பன், மணி ஆகியோரின் வீடுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் அப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய பட்டாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை நடைமுறைப் படுத்த வேண்டும் என திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.