திருவள்ளூர், ஜூலை 5- பள்ளிப்பட்டில் கொண்டா ரெட்டி வகுப்பை சேர்ந்த வர்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ் கேட்டு கிடைக் காததால் 80 வயது முதியவர் பள்ளிப்பட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கீளபூடி, பாண்டிரவேடு, அகூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாரெட்டி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் 11 கிராமங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிப்பட்டு அடுத்த கீளபூடி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஜி.எம்.பெரியசாமி என்பவர் கொண்டாரெட்டி மக்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ் கேட்டு வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை முறையிட்டும் கிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக கடந்த 11-10-2021 அன்று நடை பெற்ற காத்திருக்கும் போராட்டத்தின் போது முதியவர் ஜி.எம். பெரியசாமி ரெட்டி. தன் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். தொடர்ந்து போராடியும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் ஞாயிறன்று இரவு பள்ளிப்பட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு தூக்கு மாட்டி தன் உயிரை மாய்த்து கொண்டார். இது குறித்து பள்ளிப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.