districts

img

பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை

திருவள்ளூர், டிச.3- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் புதன்கிழமை (இன்று) கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும்,  அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட் புதனன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான ஐரோப்பிய செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் பாய இருக்கும் ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் செவ்வாய் பகலில் தொடங்கியது. இதனையடுத்து, ராக்கெட் ஏவப்படுவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் புதனன்று கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீன்வள கூட்டுறவு சங்கம் மூலம், திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.