திருவள்ளூர்,ஏப். 3- திருவூரில் வேட்டைக்காரன் இன மக்கள் சுடுகாட்டுப்பாதை கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஏப்-3) மனு அளித்தனர். திருவள்ளூர் வட்டம், திருவூர் ஊராட்சியில் வேடன் கண்ணப்ப நாயக்கர் தெருவில் வசிக்கும் வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள், சுமார் 70 ஆண்டுகளாக குடியிருந்து வருகின் றனர். இங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்ல சாலை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் அருகில் உள்ள தொழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் வழியாக சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதற்கு பாலாஜி நகர் மக்கள் எதிர்ப்பு தெவிக்கின்றனர். இந்த எல்லை பிரச்சனையால் அடிக்கடி இரு பிரிவு மக்களிடையே மோதல்கள் ஏற்படுகிறது. சுடுகாட்டுப்பாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி யாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அதை ஊர் பிரச்சினையாக மாற்றி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் திருவூர் உள்ள வேட்டைக் காரன் இன மக்களுக்கும், பாலாஜி நகர் மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நடை பெறுகிறது. சடலத்தை எங்கள் ஊர் வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று வழி மறித்து அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றி பாதை ஏற்படுத்துக
ஒவ்வொரு முறையும் தொடர் கதையாக உள்ள மோதல் போக்குகளை தவிர்க்க, வேடன் தெரு, பிள்ளையார் கோயில் அருகில் உள்ள பழமை வாய்ந்த பொது கிணறு, அதனை ஒட்டியுள்ள மேடையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, அதையே சுடுகாட்டிற்கான பாதையாக அமைக்கலாம் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, பகுதி நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.