திருவள்ளூர், ஏப்.16 - திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் 50 விழுக்காடு அளவிற்கு பழுதாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் - திருத்தணி, செங்குன்றம் - ஆரம்பாக்கம் சாலை யிலும், திருவள்ளூர் - பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, ஆவடி, செங்குன்றம் மாநில நெடுஞ்சாலைகளிலும் அதிகளவில் சாலை விபத்து கள் மற்றும் வழிப்பறி கொள்ளைகள், ரேஷன் அரிசி, போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது. மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி, பஸ், வேன், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் சென்று வருகின்றன. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு காயம், உயிர் பலி மற்றும் வழிப்பறியும் நடக்கின்றது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருவள்ளூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட 5 உட்கோட்டங்களில் உள்ள 24 காவல் நிலையங்கள் உள்ன. இவற்றில் போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்கவும் வங்கி, கடைகள், குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்கவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்கள் பல சேதமடைந்து விட்டன. இதில் திருவள்ளூர் நகரில் உள்ள காமராஜர் சாலை சந்திப்பு, நேதாஜி சாலை - எம்.ஜி.ஆர்., சிலை, தேரடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேமராக்கள் பழுதடைந்து, தரையை நோக்கி, திரும்பி தொங்குகிறது. இதனால், போக்குவரத்து விதிமீறல், விபத்து உள்ளிட்டவற்றை, சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய இயலவில்லை. மாவட்டத்தில் 50 விழுக்காடுக்கு மேல் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இவற்றை மாவட்ட காவல்துறை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.