உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பூலாங்கிணர் கிராமத்தில் வசித்து வரும் மாணிக்கம் (வயது 70 ) என்பவர் கடந்த 18 ஆம் தேதி அன்று ஏற்பட்ட விபத்தால் மூளை சாவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையின் படி உடல் உறுப்பான கல்லீரல், கண்கள், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவற்றை தானமாக அளித்தனர். தானம் செய்யப்பட்ட மாணிக்கத்தின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பூலாங்கிணருக்கு எடுத்து வரப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் படி, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார் இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் உடுமலைப்பேட்டை மின் மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது .