districts

img

நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் வழக்கில் மேல்முறையீடு செய்திடுக! தமிழ்நாடு அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!

நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் வழக்கில் மேல்முறையீடு செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனவே திருமதி இந்துமதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இத்தொகுதியை பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்தது தவறு என்றும் ஆகவே இந்துமதிக்கு பதிவி பிரமாணம் செய்து வைக்க கூடாது என்றும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவகுமாரும், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதனால் இந்துமதி பதவி ஏற்க முடியாத நிலை இருந்து வந்தது.

இதனை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் இணைந்து வழக்கை நடத்தி வந்தன. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சந்திப்புகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிக்கான போராட்டங்களும் நடத்தப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாந்த் மற்றும் கே.சி.கார்ல்மார்க்ஸ், பர்வீன் ஆகியோர் வழக்கில் ஆஜராகி வந்தனர். அரசு தரப்பில் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் என அனைவருமே இவ்வழக்கில் இந்துமதிக்கு பதவி ஏற்பு செய்து வைத்திட வேண்டும் என்று வாதிட்டனர்.

எனினும் வழக்கில் இன்று தீர்ப்பளித்த  நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவர்கள் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப் பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பிரிவு பெண்ணுக்கு நான்கு வாரங்களில் ஒதுக்கிட உத்தரவிட்டுள்ள நிலையில் மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்துவதோடு திருமதி இந்துமதி தரப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக அமைப்புகள்  சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.