districts

img

நாயக்கனேரி தலித் பெண் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு விடிவு எப்போது ?

திருப்பத்தூர். ஜூலை 12 - திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்  தலித் பெண் இந்துமதி பாண்டியன் போட்டியின்றி தேர்வு பெற்றார். தேர்தல் ஆணையமும் சான்றிதழ் வழங்கியது. 

ஆனால், இதுவரைக்கும் மாவட்ட நிர்வாகத்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை. இதையடுத்து, ஜனநாயக அமைப்புகள் சார்பில் பல முறை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித  உரிமை செயல்பாட்டாளர்கள் இணைந்து சமூக நீதி மறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தனர். இந்த அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு ஆம்பூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதை மாவட்ட நிர்வாகம் சுட்டிக் காட்டி பதவி ப்பிரமாணம் செய்துவைக்க மாவட்ட நிர்வாகம் மறுத்தது. அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம்  இடைக்கால தடை விதிக்கவில்லை என்பதை போராட்டக்குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கு வருகிற 18 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும் என நாயக்கனேரி தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்து மதி பாண்டியனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று ( ஜூலை 12) திருப்பத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன், சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி ஆகியோர் தலைமையில் தர்ணா நடைபெற்றது.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி துவக்கி வைத்தார், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, ஜி. ரவி, விசிக மாவட்டச் செயலாளர் சி. ஓம் பிரகாசம், நகர தொழிற்சங்க  கூட்டமைப்பு அமைப்பாளர் சி.கேச வன், தலித் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பின் தலைவர் ராமு, வழக்கறிஞர் மருதன், உதயகுமார் (இளைஞர் முன்னணி) கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

 ஜூலை 19 போராட்டம் :  சாமுவேல்ராஜ் எச்சரிக்கை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் போராட்டத்தை நிறைவு செய்து பேசுகையில், “கடந்தாண்டு சுதந்திரதினத்தன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 350 ஊராட்சிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 ஊராட்சிகளில் மட்டும் தான் தலித் தலைவர்கள் கொடி ஏற்றக்கூடிய நிலை உள்ளது.  40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நாற்காலி கூட இல்லை என்பது தெரியவந்தது.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் தொடர்ந்துள்ள வழக்கு வருகிற 18 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினத்தில் அரசு வழக்கறிஞர் கட்டாயம ஆஜராக வேண்டும். இந்த முறையும் வாய்தா வாங்கினால் ஜூலை 19 அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார். 

எனவே, திருப்பத்தூர் மாவட்ட அரசு நிர்வாகம், காவல்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் சமூக நீதியை நிலைநாட்டி அரசியல் சாசன விதிகளை முறையாக பின்பற்றி தேவையான அனைத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். செய்ய தவறினால், எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய ஒரு நிலைக்கு வழி வகுக்காமல், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியனுக்கு உடனடியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றார் சாமுவேல்ராஜ்.