திருநெல்வேலி, செப்.22- மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையில் மனித உரிமை மீறல்கள் குறித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்தது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் 539 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வேலையும், சம்பளமும் மறுக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அவர்கள் வசித்து வரும் மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் மின்சாரத்தை தடை செய்வது, குடிநீர் வினியோகத்தை நிறுத்தி வைப்பது என பல நெருக்கடிகளை வழங்கியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையை கண்டறிவதற்காக தேசிய மனித உரிமை ஆணையக் குழுவின் டிஎஸ்பி ரவி, ஆய்வாளர் யோகேந்திர குமார் திரிபாதி மாவட்டத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக மனித உரிமை ஆணைய குழுவினர் கேட்டறிந்தனர்.
இதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர், அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அதிகாரிகள் திணறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை, தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்து அந்த கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டு வருவதாக டிஎஸ்பி ரவி சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை வண்ணார்பேட்டை சுற்றுலா விடுதியில் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள், அதிகாரிகளிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விபரங்களை கேட்டறிந்தனர். இந்த விசாரணையானது இரவு வரை நீடித்தது. சனிக்கிழமை இரவே தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றது.