districts

‘ஷேர் மார்க்கெட் டிரேடிங்’- ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது!

தூத்துக்குடி, டிச. 7 தூத்துக்குடியில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.52,11,000 பணத்தை மோசடி  செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி அந்த நபர் அவர்களை தொடர்பு கொண்டு அதில் குறிப்பிட்டுள்ளபடி முதலீடு செய்து முதலில் ரூபாய் 4,40,000/- பணத்தை லாபமாக பெற்றுள்ளார். பின்னர் மேற்படி மர்ம நபர்கள் அந்த நபருக்கு தாங்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி www.irqql.com என்ற இணையதள இணைப்பை அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மேற்படி நபர் அதை கிளிக் செய்து அதில் வந்த FHT என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ரூபாய் 52,11,132/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.  பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)  எடிசன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்  சாந்தி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் மலப்புரம் இடவான பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பச்சபரம்பன் மகன் அஜ்மல் (45) என்பவர் மேற்படி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து  போலீசார் கேரளா சென்று அஜ்மலை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் IV ல் ஆஜர்படுத்தப்பட்டு அஜ்மலை தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.