districts

img

போடி வடக்குமலை, அகமலை மலைப்பகுதியில் பட்டா கேட்டு மனுகொடுக்கும் போராட்டம்

தேனி, ஜூலை 12 - போடி வடக்கு மலை, கழுகுமலை முதல் அகமலை வரை 17 புலன்களில் உள்ள அனுபவ விவசாயிகளுக்கு தேனி ஆட்சியராக இருந்த சுனில் பாலிவால் பரிந்துரையின் படி பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

தலைமுறை தலைமுறையாக அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு 1948 ஜமீன் ஒழிப்பு சட்டம் பிரிவு 26-இன் கீழ் பட்டா வழங்க வேண்டும்; அரசாணை 1300-இன் படி ரயத்துவாரி பட்டா வழங்க வேண்டும். வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகளை மிரட்டுவது, வெளியேறு என நிர்பந்திப்பதை வனத்துறை நிறுத்த வேண்டும். ஊத்தாம்பாறை முதல் பெரிய சோலை வரை பாதையை விவசாயிகள் பயன்படுத்த அளவீடு செய்து கொடுக்க வேண்டும்; குரங்கணி, சென்ட்ரல் பகுதியில் குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது. சோலையூர் மலை வாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர்கள் தேனி ஆட்சியர் ஷஜீவனாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

ஆர்ப்பாட்டம்

முன்னதாக சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போடி தாலுகா தலைவர் இ.மூக்கையா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டச்  செயலாளர் டி.கண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சு.வெண்மணி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன், போடி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், ஊத்தாம்பாறை விவசாயிகள் சங்க தலைவர்கள் எஸ்.எம்.பால்பாண்டியன், தாமோதரன், வி.ரெங்கத்துரை, ஆர்.சிவக்குமார், சி. சங்கரபாண்டியன், பி.சையது இப்ராஹிம், பி.கோபாலகிருஷ்ணன், பி.குமரேசன், பி.வீராச்சாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

விவசாயிகளை வெளியேற்றாதீர்!

போராட்டத்தின் போது பெ.சண்முகம் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர், விவசாயிகளுக்கு கொடுத்த நெருக்கடியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலையிட்டு அந்த நிலங்களை பாதுகாத்துத் தந்தது அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்க வேண்டும். இந்த நிலங்களில் வனத்துறையினர் அத்துமீறி நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனாதீனம் நிலங்கள் வருவாய்த் துறைக்கு சொந்தமானவை. இந்த நிலத்தில் தான் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2 ஏக்கர் நிலம் பட்டா வழங்கப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்காதது அரசு நிர்வாகத்தின் குறையே தவிர, விவசாயிகளின் குறை அல்ல. வனத்துறையினர் அடாவடியாக பேசுவதை நிறுத்தி விட்டு, விவசாயிகளுடன் மோதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. 

அகமலை அண்ணா நகரில் வீட்டுமனை பட்டா கொடுத்து 40 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை வெளியேறச் சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.