தஞ்சாவூர், அக்.11 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சார்பில் 1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா, இயற்கை பாதுகாவலர்களுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த விழாவை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், மா, பலா, நெல்லி, இலுப்பை, கொய்யா, அரசு உள்பட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோன்று, ஆயிரம் பனை விதைகளை விதைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இதையடுத்து கண்டிராத்தம் விவசாயி மு.நரசிம்மன், அரியலூர் அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஆலோசகர் ஆ.வேலுசாமி, கள்ளப் பெரம்பூர் மர நடவுக் குழு பெ.ரவிச்சந்திரன், ஆழியவாய்க்கால் கா.ரவிச் சந்திரன், ஆச்சாம்பட்டி கி.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு இயற்கை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. காவிரித் தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவ அறங்காவலர் அரு.சீர்.தங்கராசு திட்ட அறிமுகவுரை யாற்றினார்.