கும்பகோணம், மே 7- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் உதவிப்பேராசிரியர்களுக்கு மே 5, 6 தேதிகளில் தமிழ் மற்றும் வாழ்வறிவியல் பாடங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலுள்ள அரசுக்கல்லூரிகள், உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் தமிழில் 15 கல்லூரிகளிலிருந்து 48 உதவிப் பேராசிரியர்களும் வாழ்வறிவியலில் 10 கல்லூரிகளிலிருந்து 48 உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடக்க மற்றும் நிறைவு விழா கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் மா.மீனாட்சிசுந்தரம், கி.குணசேகரன், தேர்வு நெறியாளர் வே. இராமசுப்ரமணியன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் உயிர் வேதியியல் துறைத்தலைவர் முனைவர் ஜெயராஜ் வரவேற்றார். தமிழ்த்துறைத்தலைவர் செ.காளிமுத்து நன்றி கூறினார்.