தஞ்சாவூர், ஏப்.19- சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தவாறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.1,400, தூய்மை காவலர்களுக்கு ரூ.1000 மாதாந்திர ஊதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்த அனைத்து வகை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிப்பதிவேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் இ.இமானுவேல், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.