districts

இணையவழி கட்டுரைப் போட்டி: இலங்கையைச் சேர்ந்தவருக்கு முதல் பரிசு

தஞ்சாவூர், ஏப்.20 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உலக மரபு நாள் விழா இணைய வழியில் கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகமும், மரபிடங்களின் நண்பர்கள் என்ற அமைப்பும் இணைந்து கொண்டாடிய உலக மரபு நாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப் பெற்றது.   இவ்விழாவிற்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் பெட்னா அமைப்பின் செயலர் முனைவர் பாலா சுவாமிநாதன் தமிழ் மரபுகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.  முனைவர் பாலா சுவாமிநாதன், இந்திய அரசு தொல்லியல் துறை, மேனாள் இயக்குநர், முனைவர் தயாளன், சிங்கப்பூர் அந்தாதி நிறுவனர் நளினா கோபால் ஆகியோர் கட்டுரைப் போட்டியின் நடுவர்களாகச் செயல்பட்டனர். மரபுகளை பாதுகாப்பது, மீளுருவாக்குவதற்கான புதிய கருத்துகள் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் 50 பேர் பங்கு பெற்றனர். இதில், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தியாகராஜா சாராலன் முதல் பரிசை (ரூ.5000) வென்றார். இரண்டாம் பரிசை (ரூ.3000) ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சஹிரா பானு வென்றார். மூன்றாம் பரிசை (ரூ.1000) இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனிஸ்த்ரா ஆனந்தராசா வென்றார். இவர்கள் தங்களது கருத்துகளை இணையவழி தெரிவித்தனர்.  விழாவில் மரபிடங்களின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஷர்மிளா தேவதாஸ், சித்ரா கோபிநாத், உஷா ஜவஹர், மரபிடங்களின் நண்பர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பேராசிரியர் க.சங்கர், சுவடிப்புல முதன்மையர் பேராசிரியர் த.கண்ணன், கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் வீ.செல்வகுமார் கலந்து கொண்டனர்.