தஞ்சாவூர்/பெரம்பலூர், அக்.26 - தஞ்சாவூரில் அக்.28 (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்.28 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோல் கோரிக்கை மனுக்களையும் கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னரே மனு அளிக்க வேண்டும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த கருத்துகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.10.2022 அன்று காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.