districts

img

முதலில் டோல் கேட் வசூல் அடுத்து வனத்துறையிடம் ஒப்படைப்பா?

தென்காசி, ஜூலை 13-  20 கிராமமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமையன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று பேசியதாவது: தென்காசி மாவட்டம் முழுவதும் விவசாயத்தையும் குற்றாலத்தையும் மையப்படுத்தியே உள்ளது. பெரிய அளவிற்கு தொழில்கள் எதுவும் இல்லை. சிறுவன் இறந்து1 விட்டதை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட ஆட்சியர் குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பதும் குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்கின்ற முடிவை எடுப்பதும் கண்டனத்திற்குரிய விஷயம். இத்தகைய முடிவு குற்றால பகுதிகளை சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அருவிகள் தான் இவர்களது வாழ்க்கை. அருவிகள் இல்லையேல் இவர்களுக்கு  வாழ்க்கை இல்லை. 

 டோல்கேட்டை அகற்றுக

வனத்துறைக்கு கொடுப்பதற்கு முன்னோட்டமாக தற்போது மாவட்ட நிர்வாகம் பழைய குற்றால அருவியில் டோல்கேட் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக டோல்கேட்டை அப்புறப்படுத்த வேண்டும். முதலில் டோல்கேட் வைக்கிற மாவட்ட நிர்வாகம் படிப்படியாக அருவியை வனத்துறையிடம் ஒப்படைத்து விடும். சிபிஎம் நடத்துகிற போராட்டம் முதல் கட்ட போராட்டம் தான். 

உடனடியாக மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் குற்றால அருவிகளை பழைய முறைப்படி 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதோடு அருவிகளில் குளிக்கக்கூடிய பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி,அதற்குரிய  உபகரணங்களை வாங்கி அருவிப்பகுதிகளில் பயன்படுத்த வேண்டும்.  அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்கின்ற முடிவை எடுத்தால் சிபிஎம் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும்.ஒன்றிய அரசின் வன பாதுகாப்புச் சட்டத்தில் கேரளாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வனத்துறையிடம் ஒப்படைத்தால் ஊராட்சியே அழிந்துவிடும் 

இதுகுறித்து ஆயிரப்பேரி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேவதி கூறுகையில்,  ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஊரில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் அருவியை நம்பியே உள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களும் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளனர். வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் எங்களது ஊராட்சியே அழிந்து விடும் நிலை ஏற்படும். 

\மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் தலையிட்டு பழைய முறையில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் தடையின்றி குளிப்பதற்கும் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நடவடிக்கை இல்லையெனில்  ஊராட்சி மக்களை திரட்டி சிபிஎம் தலைமையில்  போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.