தாராபுரம் அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் வக்கீல் உட்பட 3 பேர் பலியானர்.
பெரம்பலூரை சேர்ந்த மணிகண்டன்(35) திண்டுக்கல்லில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி போதுமணி(25). இவர்களுக்கு 3 வயதில் ருத்ரா கசம்பூ என்ற மகளும், பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருந்தது. மணிகண்டன், மனைவி, மகள் மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் ஒரு காரில் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு திரும்பினர்.
இந்நிலையில், தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை சாலக்கடை அருகே வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், அவரது மனைவி மற்றும், 3 மாத ஆண்குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், அவரது மகளை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். குழந்தை ருத்ரா கசம்பூ சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மூலனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போதுமணி மற்றும் 3 மாத குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.