மதுரை, ஆக.26-
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின்பு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சு.வெங்கடேசன் பேசினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி ஆதரவு பெற்ற மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சு.வெங்கடேசன் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திங்களன்று மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டு செல்லூர் அய்யனார் கோவில் தெரு அருகில் இருந்து திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். அவர் பேசியதாவது:
மதுரை மக்கள் ஒரு மகத்தான வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள். அதுவும் 35 ஆண்டுகளுக்கு பின்பு 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தை கொடுத்து நீங்கள் எங்களை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். அதற்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக முக்கியமாக மதுரையில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தொண்டர்களை ஒருங்கிணைத்து மிக சிறப்பாக செயலாற்றிய திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை அமைத்த தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைத்து, செல்லூர் கண்மாயை சீரமைக்க ரூ.70 கோடி வரை நிதி வேண்டும் என்று கடும் முயற்சி செய்து கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தளபதியின் முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் துணை நிற்பேன். மேலும் இப்பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மேலும் முயற்சிகளை மேற்கொள்வேன். அந்த வகையில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.