districts

img

கொள்ளிடம் ஆற்றை ரசிக்க குவிந்த வெளிநாட்டு பறவைகள்

சீர்காழி, மார்ச் 5 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவை இனத்தைச் சேர்ந்த நத்தை கொத்தி நாரை, கருப்பு அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளைக் கொக்குகள் மற்றும் நீர் காக்கைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து தங்கி, பின்பு தன் குடும்பத்துடன் தாயகம் செல்கின்றன. பெரம்பூர் கிராமத்தில் உள்ள புளியமரம், வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரங்களில் வந்து தங்குகின்றன. இந்த பறவைகளை பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது குறைந்த அளவு சப்தத்துடன் கூடிய பட்டாசுகளையே வெடித்து, அங்கு தங்கியுள்ள பறவைகளுக்கு எந்த இடையூறுமின்றி பாதுகாத்து வருகின்றனர். வேதாரண்யம் பகுதிக்கு பல வகையான பறவைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து தங்குகின்றன. ஆனால் அதில் சில வகைகள் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூரில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பறவைகளில் ஒருவகையான பறவைதான் நத்தை கொத்திநாரை பறவை. இந்த இனத்தைச் சேர்ந்த பறவைகள் ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இங்கே வந்து இனப்பெருக்கம் செய்கின்றன என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இந்த வகையான நத்தை கொத்தி நாரை, கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிக்கு சென்று கூட்டமாக சென்று இரை தேடுகின்றன. கடந்த சில தினங்களாக கொள்ளிடம் ஆறு மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக வயல்வெளியில் பறந்து சென்று அமர்ந்து இரை தேடுவது பார்ப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.