ராணிப்பேட்டை, டிச. 9 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அடுத்த புது ராமாபுரம் கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக மின் டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து ராமாபுரம் கிராம மக்கள் திங்களன்று (டிச. 9) உடனடியாக மின் டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் துரை சங்கரன், காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் சரி செய்யப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். இதில் கட்சியின் அரக்கோணம் & நெமிலி தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன், தாலுகா குழு உறுப்பினர் கே. சிவகுமார், நெமிலி நகர செயலாளர் செல்வமணி, நங்கமங்கள கிளை செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் மனோகர் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.