ராணிப்பேட்டை, டிச. 9 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், லாலாபேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி. அவர் தையல் கலைஞர் பணி செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விதமாக பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தன. அவருக்கு உதவியாக அவருடைய மனைவி மாதவி பணிக்கு செல்ல முடியாமல் அவரை கவனித்து வருகிறார். இந்நிலையில் பழைய அடையாள அட்டையில் அரசு அவருக்கு வழங்கி வந்த ஊனமுற்றோர் உதவித் தொகை யும் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, மாதர் சங்கம் வி. தாட்சாயினி, கட்சியின் லாலாபேட்டை கிளைச் செயலாளர் வி. செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து திங்களன்று (டிச. 9) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். விவசாய சங்க கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உடனடியாக மாற்றுத்திறனாளி மாசிலாமணிக்கு சக்கர நாற்காலி வண்டி வழங்கினார். மேலும் நிறுத்தப்பட்ட ஊனமுற்றோர் உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.