ராணிப்பேட்டை, டிச. 10 – ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், வாழைப்பந்தல் கிராம கைத்தறி நெசவாளர்கள் வெள்ள நிவாரணம், தேசிய அடையாள அட்டை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி நெசவாளர்கள் பலருக்கு தேசிய கைத்தறி நெசவாளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை.
இதனால் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பலன்கள் கிடைக்கவில்லை. பெஞ்சால் புயல் காரணமாக தொடர் மழையால் நெசவாளர்களின் கால்குலி பள்ளத்தில் ஊற்று தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நெசவு செய்ய முடியாமல் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க கேட்டு நெசவாளர்கள் திங்களன்று (டிச. 9) சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து காவல் உதவி ஆய்வாளர் செந்தில், கலவை வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.