ராணிப்பேட்டை, டிச.5- ராணிப்பேட்டை மாவட்டத்தில் வானாபாடி ஊராட்சியில் ஏஜி&பி பிரதம் நிறுவனம் சார்பாக குழாய் மூலம் தொழிற்சாலை மற்றும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக வானாபாடி ஊராட்சியில் அரசின் அனுமதியுடன் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய் அமைத்து விநியோகம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகர் பகுதியில் எரிவாயு குழாய்களை இணைப்பதற்காக சாலையோரத்தில் வால்வு அமைக்கப்பட்டு, அது தொடர்பான எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது.
இதனை கவனிக்காமல் ஓட்டுநர் தினேஷ் என்பவர் இலகுரக சரக்கு வாகனத்தை அதன் மீது மோதியுள்ளார். இதனால், வால்வில் சேதம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த ஏஜி&பி பிரதம் நிறுவன ஊழியர்கள் உடனடியாக இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தி, விபத்தில் சேதமடைந்த வால்வினை சரி செய்து, அப்பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாயை சீர் செய்தனர். இதுதொடர்பாக, ஏஜி&பி பிரதம் நிறுவனம் சார்பாக ஓட்டுநர் தினேஷ் மீது ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.