இராமேஸ்வரம், டிச. 5 - தமிழக மீனவர்கள் 14 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகு களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் வியாழக்கிழமை அதி காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பிரிட்டோ, மெஜோ ஆகி யோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளில் சென்றிருந்த ரிபாக்சன், ராஜ பிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 மீனவர் களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் 14 பேரும், ஊர்காவல் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை க்குப் பிறகு சிறையில் அடைக்கப்படு வார்கள் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 3 அன்று காங்கேசன் கடல் பகுதியில் மீன் பிடித்தாகக் கூறி 18 தமிழக மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படை, அதற்கு முன்னதாக நவம்பர் 10-ஆம்தேதி 21 மீனவர்களை, 3 படகுகளுடனும், நவம்பர் 12 அன்று 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதன் மூலம் 2024 ஆண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட படகுகளையும், 500-க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.