districts

img

60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புக!

இராமநாதபுரம், ஜூலை 27- மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலப் பொதுக்குழு கூட்டம் இராமேஸ்வரத்தில் ஜூலை 27 சனிக்கிழமையன்று மாநிலத் தலைவர் டி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் எஸ்.உமாநாத்  வரவேற்றார். மாநில துணைத்தலைவர் இராமச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் .சிஐடியு அகில இந்திய செயலாளர் சுதீப் தத்தா துவக்க உரையாற்றினார். 

மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,மின்ஊழியர் மத்திய அமைப்பின்  மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஆர்.குருவேல், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தனியார்மயத்திற்கு எதிராக  போராட்டத்தை துவங்குவோம்

சிஐடியு அகில இந்திய செயலாளர் சுதீப் தத்தா கூறியதாவது. 

மின்சார ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள குறைபாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் , இந்தச் சட்டம் முதலாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. தொழிலாளிகள் மீது சுமைகளை சுமத்துகிறது. அதானி, அம்பானி போன்ற தனியார் நிறுவனங்களிடம்  மின் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்ததாலும் மின்சார வாரியம்  தனியார் நிறுவனங்களிடமிருந்து  மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதாலும் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதை சரி செய்ய அரசே மின் உற்பத்தியை செய்ய வேண்டும் . அதானிடமிருந்து யூனிட் 7 ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக அரசே உற்பத்தி செய்தால் மூன்று ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடியும். 

இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும், மின் உற்பத்தியை திறந்தவெளி சந்தையாக அனுமதித்ததின் விளைவாலும்,  சந்தை விலையை  விட மூன்று மடங்கு அதிகமான விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்வதாலும் தான் நஷ்டம் ஏற்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் ஒரு வீட்டிற்கு பொருத்த வேண்டும் என்றால் செலவினம் பத்தாயிரம் ரூபாய். இந்த பத்தாயிரம் ரூபாயை பயனாளியும் மின் வாரியம் தான்  ஈடு கட்ட  வேண்டும் . ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மின் வாரியத்தையும் தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்த்து  தர வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நிலைப்பாடு. 

இதற்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்டத்தை துவங்க வேண்டும், ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரத்திற்கு பதிலாக விவசாயின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறுகிறது. இதுபோல் சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும் எனக் கூறி கேஸ் சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலை விவசாயிகளுக்கும் வரும். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மூலமாக 1972 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த ஊழியராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை போராட்டத்தின் மூலமாக திரட்டி பணி நிரந்தர ஆணை பெற்றுத் தந்தது. 

தற்பொழுது தமிழ்நாடு மின்வாரியத்தில் 9 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை திரட்டி போராடிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.