districts

img

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.24 - அரசுப் பள்ளிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்களை பணி நியமனம் செய்ய வேண்டுமென புதுக்கோட்டை ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணாவிடம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமை பயிற்றுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் பணி தேர்வுக்கான அறிவிப்பாணையை கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.  கடந்த பிப்.4 அன்று தேர்வு நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இத்தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன.

அதில், தேர்ச்சி பெற்றோருக்கு ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் உத்தேச பட்டியலும் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 68 பேர் தேர்வாகினர். ஆனால், 4 மாதங்களுக்கு மேலாகியும் பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.

அரசுப் பணிக்கு செல்லப் போகிறோம் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி பணியையும் தொடரவில்லை. இதனால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதோடு, குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் வட்டார வளமையங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோரை உடனே பணி நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.