புதுச்சேரி, டிச.9- பெஞ்சால்புயல் மழைவெள்ளம் பாதித்த புதுச்சேரியில் 2 நாட்களாக ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் கடந்த 30ம் தேதி பெஞ்சால் புயல் கனமழை யால் ஒரே நாளில் 48.4 செமீ மழை கொட்டித்தீர்த்தது.
இதன் காரணமாக புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகளின் உபரி நீர்திறப்பால், தென்பெண்ணையாறு, வில்லிய னூர் சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாகூர் அதனை சுற்றி யுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி கடும் சேதத்திற்கு உள்ளானது.
இந்த கனமழைக்கு புதுச்சேரியில் 4 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.614 கோடி புதுச்சேரிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார். முன்னதாக மாநில அரசின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு ஆய்வு குழு
இந்நிலையில் கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவினர் ஞாயிறன்று ஆய்வு செய்தனர். அவர்களை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் வர வேற்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவான இணை செயலாளர் ராஜேஷ்குப்தா உள்ளிட்ட மத்திய குழுவினர் அங்கிருந்து மணவெளித் தொகுதி யிலுள்ள டி.என்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியை பார்வை யிட்டு திரும்பினர்.
ஆய்வை முடித்த ஒன்றிய குழுவினர், சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட னர். இரண்டாவது நாளாக திங்கட்கிழமை (டிச.9)அக்குழு வினர் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கணக்கன் ஏரி, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளையும், திருக்கனூர் கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விலை நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறை களையும் கேட்டறிந்தனர்.
அதிகாரிகள் தலைமையில் கூட்டம்
ஆய்வை முடித்துக் கொண்ட குழுவினர் ராஜீவ் காந்தி சதுக்கம் அருகில் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சரத் சவுகன், அரசு செயலர்கள் பங்கஜ் குமார், கேசவன், முத்தம்மா, நெடுஞ் செழியன், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட காட்சிகளை பார்வையிட்டனர்.