புதுச்சேரி மக்கள் வர லாறு காணாத புயல் வெள்ள பாதிப்புகளிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை அரசு அறி வித்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை. மேலும் அவை இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவில்லை. ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு சேதங்களை பார்வையிட வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு நடுவில் காமாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு புகழ் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் வழக்கம்போல் வீடியோ பதிவில் புலம்பித் தீர்த்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது
"10 கோடி ரூபாய்க்கு பத்து மோட்டார்கள் வாங்கி கிருஷ்ணா நகர் ரெயின்போ நகரில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் எதிர்பாராத அளவு பெய்த கடுமையான மழையால் முழுமையாக செய்ய இயலவில்லை. நாங்கள் இறைத்த தண்ணீர் திரும்ப எதிர் திசையில் இருந்து மீண்டும் வந்து மீண்டும் தேங்கிவிட்டது. எனவே எதிர்காலத்தில் மக்கள் இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள தரைத்தளத்தில் வசிக்க வேண்டாம் எனவும் முதல் தளத்திலே சென்று வசிப்பதற்கு ஆவண செய்யலாம்" என்று அறிவுபூர்வமான கருத்தை வெளி யிட்டுள்ளார். அதற்கு சாட்சியாக நமது மாநில முதல்வரையும், பொதுப்பணித்துறை அமைச்சரையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.
இத்தகைய இவரது அறிவுபூர்வமான கருத்தில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள கீழ்காணும் சந்தேகங்கள்.
1) பத்து மோட்டார்கள் வைத்து சில நாட்கள் நீர் இறைக்க பத்து கோடி ரூபாய் செலவு ஆகுமா? அதற்கான தரவுகளை அவர் வெளியிடுவாரா?
2) சட்டமன்ற உறுப்பினர் கடந்த வருடம் லாஸ்பேட்டையிலிருந்து கிருஷ்ணா நகர் மற்றும் ரெயின்போ நகருக்கு வந்து சேரும் மழை நீரை வேறு பக்கமாக மின்மோட்டார் மூலம் திசை திருப்பி விட பல கோடியில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தினார் அத்திட்டத்தின் தற்போது நிலைமை என்ன?
3) அவர் மக்களை தரை தளத்திலிருந்து முதல் தளத்திற்கு சென்று வசிக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மக்களின் பயன்பாட்டில் உள்ள இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஒரு தீர்வை அவர் சொல்லவில்லை. இதற்கு சட்டமன்ற உறுப்பினர் வேறு ஏதும் திட்டம் வைத்துள்ளாரா? முக்கியமாக கால்நடைகளில் பசுக்களை பாதுகாப்பது பாஜகவின் முக்கிய குறிக்கோள் ஆயிற்றே கோமாதா இவர்களின் குலமாதாவாயிற்றே.
பாஜக சட்டமன்ற உறுப்பி னர் மக்களின் துயரங்களை தனது வாக்கு வங்கி அரசி யலுக்கு முதலீடாக பயன்படுத்த தொடங்கி விட்டார். அவரது நண்பர் புதிய அரசியல் பிரமுகர் லாட்டரி மார்ட்டின் அவர்களுடன் புதுச்சேரியில் தனது புதிய வியாபாரத்தையும் தொடங்கி விட்டார். அதற்கு அச்சாரமாக தொகுதி மக்களுக்கு தற்போது இலவசங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார். மக்களின் அனைத்து துயரங்களுமே அவருக்கு முதலீடு தான்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் மக்களின் மறதியைத்தான் முதலீடாக பார்க்கிறார். மக்கள் தூங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கின்றார். அவரது கோயில் நில அபகரிப்பு மோசடி, லாட்டரி சீட்டு மோசடி முதலிய அனைத்துமே மக்களுக்கு தெரியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அல்லல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
கிருஷ்ணா நகர் ரெயின்போ நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்ப தற்கு காரணம் கடுமையான மழைப்பொழிவு மட்டுமல்ல. இவரும் இவரது உறவினர்கள் மற்றும் சில சுயநல அரசு அதிகாரிகளும் நீர் வரத்து வாய்க்கால்களில் செய்துள்ள ஆக்கிர மிப்புகளும், வரம்பு மீறி கட்டப்பட்டுள்ள வீடுகளுமே காரணமாகும். இவர்களின் ஆக்கிரமிப்புகள் இவர் தொகுதி மக்களுக்கும் தெரியும். எனவே சட்ட மன்ற உறுப்பினர் பிரச்சனைகளின் தீர்வு களை விட்டுவிட்டு புதிய அறிவுரைகள் என்ற பெயரில் அறிவுக்கு ஒவ்வாத ஆலோசனைகளை வழங்குவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஒரு பதிவில் சட்டமன்ற உறுப்பினர் தான் கோவில் நிலத்தை அபகரிக்கவில்லை என்றும் தான் முறையாக கிரைய பதிவு செய்துள்ள தாகவும், தான் தவறு செய்ததாக யாராவது நிரூபித்தால் கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்தார். ஆனால் பின்னர் இவரது நில மோசடி நிரூபணமாகி நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும்.
எனவே இவர் இந்த வீடியோ பதிவில் சொல்லியபடி அதற்கு முன் உதாரணமாக இவரது தொகுதி மக்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு குடியமர்த்த அனைவருக்கும் இவர் மாடி வீடு கட்டி கொடுப்பதோடு கால்நடைகளுக்கும், வாகனங்களுக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படா வண்ணம் அரசு செலவில் திட்டம் அமைத்து தந்தால் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.
எஸ்.ராமச்சந்திரன்