புதுச்சேரி, அக்.27- தனியார் மருத்துவக் கல்லூரி களின் லாபத்தை அதிகரிக்க மாண வர் சேர்க்கைக்கான கலந்தாய்வை புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தாமதப்படுத்தி வரு கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம் பயில நீட் என்னும் ஆட்கொல்லி தேர்வு முறையை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தி கடந்த காலங்களில் பல ஏழை, எளிய மாணவர்களின் உயிர்களை பறித்தது. நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி ஏதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இருப்பினும் இரண்டு, மூன்று தனியார் நீட் சிறப்பு பயிற்சி மையங்களில், பயிற்சி பெற்ற மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு இந்த கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து, அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு முதல் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதே சமயம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புதுச்சேரியில் இன்னும் முதல் சுற்றுக்கான தகுதி பட்டியலை வெளியிடாமல் தனி யார் மருத்துவக் கல்லூரிகளின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் புதுச்சேரி அரசு செயல்படுவது, காத்தி ருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டிற்கான மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணத்தை நிர்ண யிப்பதில் அரசுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் பட்டியலை வெளியிடாமல் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் விதத்தில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அரசு செயல்படுகிறது. கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்குண்டான 50 விழுக்காடு இடங்களை பெறு வதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முத லாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுச்சேரி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும். கடந்தகாலங்களில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான தகுதி பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்தி தனியார் கல்லூரிகளின் லாபத்தை அதிகரிக்க செய்ததைப் போல, தற்போது மருத்துவக் கல்லூரிகளின் லாபத்தை அதிகரிக்க வழிவகை செய்யும் புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இனியும் காலம்தாழ்த்தாமல் உடனடியாக கல்விக்கட்டணத்தை மாணவர்கள் நலன் சார்ந்து நிர்ணயித்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு கொடுக்கவேண்டிய 50 விழுக்காடு இடங்களை பெற்று புதுச்சேரி அரசு தகுதி பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.