districts

பெரம்பலூர் - அரியலூர் கோட்டங்களை பிரித்து மக்கள் சேவையை துரிதப்படுத்த வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட மாநாடு வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 7- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பெரம்பலூர் வட்ட மாநாடு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  வட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வி.தமிழ்செல்வன் கொடியேற்றி துவக்கி வைத்தார்.  முன்னதாக வட்ட துணைத்தலைவர் சி.இராஜகுமாரி வரவேற்றார். துணைச் செயலாளர் ஆர்.கண்ணன் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம் வேலை அறிக்கையும், பொருளாளர் கே.கண்ணன் வரவு - செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயலாளர் எஸ்.ஜோதி சிறப்புரையாற்றினார்.  மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். 2022 மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தையே தொடர வேண்டும். அலுவலக ஊழியர்களுக்கு தேவையான எழுது பொருட்களை மாதந்தோறும் தாமதமில்லாமல் தொடர்ந்து வழங்கி பணப் பயன்களையும் வழங்க வேண்டும். மின் வாரியத்தில் மொத்தம் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரம் களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு, ஐடிஐ படித்தவர்களையும் ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டும் நிரப்ப வேண்டும்.  கேங்மேன் பணியை கள உதவியாளராக மாற்றி அமைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். களப்பிரிவு ஊழியர்களுக்கு தளவாட சாமான்களை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  பகுதிநேர பணியாளர்களை முழுநேர பணியமர்த்த வேண்டும். பெரம்பலூர்-அரியலூர் கோட்டங்களை பிரித்து மக்கள் சேவையை துரிதப்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட துணை செயலாளர் எஸ்.நல்லுசாமி நன்றி கூறினார்.