பெரம்பலூர், ஜூலை 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக் கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிறன்று மாலை நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து சிபிஐ நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கல்வியை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசாங்கமே நடத்த வேண்டும். தற்போது அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளி-கல்லூரிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாணவி நிஷா கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கடினமாக இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் அரசை நடத்திக் கொண்டு நூறு நாள் வேலையை ஒன்றிய அரசு முடக்க நினைத்தால், தேன் கூட்டில் கைவைத்த கதையாகிவிடும். இலவசங்களால் மாநில அரசின் வளர்ச்சி பாதிக்கிறது. இலவசங்கள் தேவையற்றது என மோடி அறிவித்து வருகிறார். ரேசன் கடையில் வழங்கப்படும் விலையில்லா இலவச அரிசி எத்தனை ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படுகிற இலவச திட்டங்களை முடக்க நினைக்கும் மோடி அரசு, குடும்பத்திற்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கத் தயாரா? பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே சட்டவிதிகளின் படி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கட்சி நிதி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், அ.கலையரசி, ரெங்கநாதன், ஆர்.கோகுலகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் செல்லமுத்து, செல்லதுரை, சிபிஐ மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், திராவிடர் கழகம் தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.