பழனி, ஆக.23 பழனியில் ஆக.24,25 தேதிகளில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக.24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி ஆகி யோர் முன்னிலையில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் டாக்டர் பி.சந்திரமோகன் கூறும்போது, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி யில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும் முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள், பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. அனைவருக்கு அனுமதி இலவசம்.
இம்மாநாட்டில் வேல் அரங்கம், அருள் தரும் அறுபடை முருகன் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் என ஒவ்வொன்றும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்வெளிநாடுகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் என 5 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு மாநாட்டு திடல் மற்றும் அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன என சந்திரமோகன் தரிவித்தார். இம்மாநாட்டில் முருகனின் ஓவியக் காட்சியகம் 3டி அரங்கில் பா.விஜய் இயக்கிய முருகன் குறும்படம் காட்டப்படுகிறது. ஆன்மீக நூல்களின் புத்தக கண்காட்சி, அறுபடை வீடுகளின் மெய் நிகர் காட்சி அரங்கம் என பல அரங்கங்கள் காட்சிக்கு உள்ளன. 24ம் தேதி காலை துவக்க நிகழ்ச்சியாக குத்து விளக்கேற்றுதல் அதனையடுத்து சிந்தனை மேடையில் கலைமாமணி சுகி.சிவம் முருகன் வளர்க்கும் முத்தமிழில் முந்து தமிழ் என்ற தலைப்பில் பேசுகிறார்.
இசை நிகழ்ச்சிகள்,கந்தர் அநுபூதி பாடல்கள் என பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி, ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன்; உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.