பழனி, டிச. 13 - ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் மோசமான கொள்கைகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டில் உழைப்பாளி மக்களுக்கு பாதகமான நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி னார். தமிழ்நாட்டில் மாற்றுக் கொள்கையுடன் மக்களுக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக் கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழனியில் டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது வருமாறு:
ஒரே நாடு ஒரே தேர்தல் - வலுவாக எதிர்ப்போம்
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தி லேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது உட்பட நாட்டின் அரசியல் சட்டம் குறித்த விவாதம் நடைபெறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக வாதிட உள்ளன. ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது அரசியல் சாசனத்தை சிதைக்கக் கூடியதாக அமையும் என்பதை எச்ச ரிக்கையாக சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது.
அரசியல் சாசனம் குறித்த அம்பேத்கரின் கவலை
அண்ணல் அம்பேத்கர் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியல் சட்டத்தை முழுமையாக எழுதி முடித்து, அரசியல் நிர்ணய சபையில் இறுதி உரையாற்றினார். அந்த வர லாற்று சிறப்புமிக்க உரையில் அவர் “இரண்டாண்டு கால விவாதங் களுக்குப் பின் ஒரு சிறந்த சட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஆனால் இந்த மகத்தான சட்டம் நிலைத்து நிற்குமா?” என்ற கேள்வியை எழுப்பினார். “நல்ல வர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் நிலைத்து நிற்கும். கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் சிதைந்துவிடும்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கு
மோடியை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தமிழகத்தி லிருந்து ஜார்க்கண்டுக்குச் சென்று பழங்குடி மக்களுக்கு சேவை செய்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி அநீதியாக கைது செய்யப்பட்டார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு திரவ உணவு உட்கொள்ள ஸ்ட்ரா கூட மறுக்கப்பட்டது. சிறைச்சாலையில் அவர் மரணமடைந்தார். அதே போல, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் நான்கு ஆண்டு களாக சிறையில் உள்ளார்.
மாநில உரிமைகள் பறிப்பு
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.2,400 கோடி நிதி வழங் கப்படவில்லை. “எங்கள் கல்விக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் நிதி வழங்க முடியாது” என எழுத்துப் பூர்வமாக ஒன்றிய அரசு பதிலளித்துள் ளது. இந்த நிதி பாஜகவின் சொந்தப் பணமா? மக்களின் வரிப்பணம் அல்லவா?
பெட்ரோல் விலை உயர்வும் ஜிஎஸ்டி சுமையும்
ஒரு லிட்டர் பெட்ரோலின் உற்பத்திச் செலவு ரூ.42 மட்டுமே. ஆனால் வரிகள் மூலம் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கிறது ஒன்றிய அரசு. கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.26.74 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது வணிகர்கள் மீது புதிய ஜிஎஸ்டி சுமை - வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வரி உயர்வும் மக்கள் போராட்டமும்
தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட் களாக திருப்பூர் நகரம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் சொத்து வரியை கடுமையாக உயர்த்தி யுள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரித்து வரி விதித்துள்ளார். திருப்பூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.5.69 பைசா வரி விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அருகிலுள்ள கோவையில் ரூ.2.94 பைசா மட்டுமே. வணிக வளாகங்களுக்கு திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.16, கோவையில் ரூ.6 மட்டுமே. இந்த அநீதியான வரி உயர்வை எதிர்த்து சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளன.
மின் கட்டண உயர்வும் வாக்குறுதி மீறலும்
தமிழக அரசின் மின் கட்டண உயர் வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு 790 யூனிட்டுக்கு ரூ.1,310 செலுத்தியவர், தற்போது 646 யூனிட்டுக்கு ரூ.3,164 செலுத்த வேண்டியுள்ளது - 100 விழுக் காடு உயர்வு. தேர்தல் காலத்தில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப் படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறை வேற்றப்படவில்லை.
சாம்சங் தொழிலாளர் போராட்டமும் சங்க உரிமையும்
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக் காக 37 நாட்கள் போராடினர். 2007-ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் 17 ஆண்டுகளாக தொழிற்சங்கமே இல்லை. சிஐடியு சங்கத்தை அங்கீ கரிக்க நிர்வாகம் மறுத்தது. உயர்நீதி மன்றம் தற்போது 6 வாரங்களில் சங்கப் பதிவு குறித்து முடிவெடுக்க உத்தர விட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மூலமாக தொழிற்சங்க பதிவாளருக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்து சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதிக்க வேண்டும்.
உழைக்கும் மக்களே நமது பலம் என்பதை மறவாதீர்
தமிழ்நாடு அரசு, ஒன்றிய பாஜக அரசின் மோசமான கொள்கைகளை எதிர்த்து உறுதியாக குரல் கொடுக் கிறது. மதவெறிக்கு எதிராகவும் மாநில உரிமைகள் பறிப்புக்கு எதிராகவும் மாநில நிதி இறையாண்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுவாக முழக்கமிடு கிறது. மாநில நலன்களை பாதுகாப்ப தற்கான; மாநில அரசின் அதிகாரம் உள்பட கூட்டாட்சி கட்டமைப்பை பாது காப்பதற்கான தமிழ்நாடு அரசின் போராட்டத்தில் தமிழ்நாடு மாநி லத்தின் மிகப்பெருவாரியான உழைப்பாளி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் துணை நிற்கிறார் கள். ஆனால் தனக்கு ஆதரவாக நிற்கும் உழைப்பாளி மக்கள் உட்பட தமிழ்நாட்டு மக்கள் மீது, மேற்கூறிய விதத்தில் சொத்து வரி உயர்வு, இதர பல உரிமைகள் பறிப்புகள் உள்ளிட்ட சுமைகளையும் தாக்குதல்களையும் தமிழ்நாடு அரசு தொடுப்பது, ஆதர வாக இருக்கும் மக்களை பலவீனப் படுத்துவது என்பதாகவே அமைந்து விடும். எனவே இதை தமிழ்நாடு அரசு மிகச் சரியாக உணர்ந்து கொண்டு தமிழக மக்களின் நலன்களை பாது காப்பதில் உறுதியாக நிற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாற்றுக் கொள்கையின் அவசியம்
பாஜகவின் பொருளாதாரக் கொள்கைக்கும், மதவெறிக் கொள்கைக்கும் மாற்றாக போராடும் மகத்தான இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லையென்றால் இந்தியா விற்கே எதிர்காலம் இல்லை” என்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் வார்த்தைகள் இன்று மிகவும் பொருத்தமானவை. தமிழகத்தில் ஒரு பலமான சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை உருவாக்குவோம்.