பழனி, டிச. 11 - மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வரவேற்பும் பாராட்டும் தெரி வித்துள்ளார்.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை காக்க உச்ச நீதிமன்றத்தில் சிபிஎம் சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் மூன்று நாள் கூட்டம் டிசம்பர் 9, 10, 11 தேதி களில் பழனியில் நடைபெற்றது. இத னையொட்டி செவ்வாயன்று இரவு பழனி மின்வாரியத் திடலில் நடைபெற்ற மாபெரும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்திற்கு வரவேற்பு
அப்போது, “தமிழ்நாடு சட்டப்பேர வையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறு வனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அர சின் இந்த நிலைபாடு மிகச்சரியானது. வரவேற்கத்தக்கது. மாநில அரசை கலந்து பேசாமல், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரான இந்த திட்டத் திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நல்ல விஷயம்” என்றார்.
மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள்
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறு வனம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரகாஷ் காரத், “இந்த நிறுவனம் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமாக்கப்பட்டது. இந்த வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் நடத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடினார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 14 பேர் பலியானார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார்.
“நாட்டின் கனிம வளங்கள் எல்லாம் அரசுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று தான் சட்டங்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு மோடி அரசு அந்த சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் எவ்வளவு அரிதான கனிம வள மாக இருந்தாலும், அது நாட்டின் சொத்தாக இருந்தாலும் அதை கார்ப்ப ரேட்டுகளுக்கு குத்தகைக்கு விட முடி யும் என்று சட்டத்திருத்தம் செய்துள்ளது மோடி அரசு.
டங்ஸ்டன், கோபால்ட், லித்தியம் போன்ற முக்கியமான கனிமப்பொருட் கள் இந்த நாட்டின் பொதுச்சொத்தாக இனிமேலும் இருக்காது. அது தனி யாருக்கும், கார்ப்பரேட்டுக்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்படும். வேதாந்தாவின் உரிமை யாளர் அனில் அகர்வால். இவர் இன்னொரு அதானி மாதிரி. இவருக்கும் மோடிக்கும் இருக்கும் நெருக்கத்தின் காரணமாகத்தான் இந்த டங்ஸ்டன் குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் கனிமவளம், இயற்கை வளங்களை எல்லாம் கார்ப்பரேட்டுக் கள் சுரண்டுவதற்கும், கொள்ளை லாபம் ஈட்டுகிற வேட்டைக்காடாக இந்தி யாவை மாற்றுவதற்கான ஏற்பாட்டைத் தான் மோடி அரசு செய்திருக்கிறது” என்று பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார்.
மோடி அரசின் வகுப்புவாத அரசியல்
“நமது நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து 7 மாதங்கள் ஆகின்றன. மோடி அரசாங்கம் 3-ஆவது முறையாக ஆட்சியை பிடித்திருக் கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட கொள்கை களைப் பின்பற்றி வந்ததோ, எப்ப டிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன் வைத்து வந்ததோ, அதிலிருந்து துளியும் மாறாது என்பது நமக்கு தெரியும். ஆர்.எஸ்.எஸ். முன் வைக்கக்கூடிய இந்துத்துவ சிந்தாந்தத்தை வைத்துப் பார்க்கும் போது, நிச்சயமாக நமது அரசமைப்பு சட்டத்தினுடைய குணாம்சம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டி ருக்கிற நிறுவனங்களுடைய, பங்கு பாத்திரம், குணாம்சம், இவற்றை யெல்லாம் மாற்றுவதற்கான முயற்சி களை தொடர்ச்சியாக முன்னெடுப் பார்கள்.
மத வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைக்கும் சங்பரிவாரம்
வடஇந்தியாவில் பாஜக ஆளக் கூடிய மாநிலங்களில் அக்கட்சி பெரும் பான்மை பலம் பெற்றிருக்கிறது. இத னால் அந்த மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது பலப் பல விதங்களில் திட்ட மிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. சட்டங்களைக் கொண்டு வருகின்றனர். அந்த சட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரங்களி லிருந்து இஸ்லாமிய மக்களை விலக்கி வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லா மியர்கள் காலம் காலமாக பாடுபட்டு உருவாக்கிய சின்னஞ்சிறு வீடுகளைக் கூட புல்டோசர் கொண்டு தகர்க்கிற, இடிக்கிற வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்” என்றார்.
பாதுகாப்புச் சட்டத்தை பாதுகாக்க சட்டப் போராட்டம்
“1991-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத்தல பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக பிரகாஷ் காரத் கூறு கையில், “அயோத்தி பாபர் மசூதி தவிர மற்ற இடங்களில் உள்ள வழி பாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் கிடைத்த போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் இருந்ததோ, அவை அப்படியே தொடர வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் செல்லக்கூடாது என்று அந்த சட்டம் சொல்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டு மனு தாக்கல்
ஆனால், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சங்பரிவார அமைப்பு கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. நாம் வெறுமனே கோரிக்கை வைக்காமல், பிரச்ச னை நீதிமன்றத்தில் இருப்பதால் வழி பாட்டுத்தலங்கள் பாதுகாப்புச்சட்டம் தொடர்பான இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் பாது காப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சங்பரிவார அமைப் பினரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தலையீட்டு மனுவில் கோரியுள்ளோம். டிசம்பர் 12 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரு கிறது. இந்த வழக்கில் நாம் சட்டப் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம்.
மத அடிப்படையிலான பிளவுவாத அரசியல்
நமது மக்களில் பெரும்பாலான வர்களுக்கு மத நம்பிக்கை உண்டு. பக்தி உண்டு, மத உணர்வு உண்டு. அவர் இஸ்லாமியராக, இந்துவாக, கிறிஸ்துவராக, பௌத்தராக, ஜைன ராக இருக்கலாம். இந்தியாவில் மதம் என்று பார்த்தால் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பெருவாரியாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு மதங்களை பின்பற்ற லாம், வெவ்வேறு வழிபாட்டு முறை களை பின்பற்றலாம். ஆனால் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் மத பேதமின்றி வசித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் மக்களின் மத நம்பிக்கை மற்றும் உணர்வுகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
உ.பி. நீதிமன்றங்களின் ஆபத்தான போக்கு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்கள் இந்த பிரச்சா ரங்களுக்கு பலியாகி உண்மையி லேயே மசூதிகளுக்குக் கீழே இந்து கோவில்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய அனுமதிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.
சம்பல் பகுதி மசூதியில் ஆய்வு செய்யக்கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 4 பேர் கொல்லப்பட்டனர். ராமர் கோவில், பாபர் மசூதி சர்ச்சையை கையில் எடுத்து ஆழமான மதவெறி வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தது போலவே நாட்டின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களை குறி வைத்து செயல்படுகின்றனர்.
5 பெரிய முதலாளிகளின் கைகளில் நாட்டின் கஜானா
அரசு கஜானாவில் உள்ள நிதியை எடுத்து கார்ப்பரேட்டுக்க ளுக்கு வாரி வழங்கும் திட்டங்க ளை அமலாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய பணமாக்கல் திட்டம். இந்தியாவில் உள்ள மிக முக்கியமான முதலாளிகளான அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா, மிட்டல், தான் இந்திய தொழில் துறையில் மிகப்பெரிய கார்ப்ப ரேட்டுக்களாக உள்ளனர். இந்தியா வில் உள்ள ஒட்டுமொத்த சொத்துக்க ளில் 20 விழுக்காடு இந்த 5 பேர்களின் கைகளில் உள்ளது. இவர்களை மோடி அரசு வளர்த்து விடுகிறது.
இரண்டு தீமைக்கு எதிராகவும் போராட்டம் அவசியம்
கார்ப்பரேட் மற்றும் நவீன தாராள மயக்கொள்கைகளை பின் பற்றும் ஒரு அரசாக மோடி அரசு இருப்பதால் இயல்பாகவே, இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாத கமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நாட்டில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. வேலையின்மை தலை விரித்தாடுகிறது. மக்கள் படும் துன்பத்தையும், துயரத்தையும் அதிகப்படுத்தும் வேலையைத் தான் மோடி அரசு செய்கிறது.
வெறும் மதவெறி அரசிய லை எதிர்த்து மட்டுமல்ல, பொரு ளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மட்டுமல்ல, இரண்டுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த முக்கியமான கடமையை சமரசமின்றி நிறைவேற்றுகிற சக்தி கள் இந்த நாட்டில் யார் இருக்கி றார்கள் என்றால், சந்தேகமே இல்லை, அது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தான்.
மதுரையில் நடைபெறும் மாநாடு கொள்கை திட்டங்களை வகுக்கும்
பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரி வாரங்கள் மக்களின் வாழ்வை நாசப்படுத்தும் பாதையில் செல்லும் போது, நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் களவாடிச்செல்ல அனுமதிக்கும் போது, அதற்கு எதிராக சாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் திரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது.
எனவே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வலுப்படுவதற்கு இடதுசாரி சித்தாந்தத்தையும், அதன் கொள்கைகளையும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. அதற்கு மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாடு திட்டங்க ளை வகுக்கும்,” என்று பிரகாஷ் காரத் பேசினார்.
அவரது ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி மொழி பெயர்த்தார்.
தொகுப்பு: இலமு, திண்டுக்கல்