districts

img

நாமக்கல்: தெருநாய் கடித்து 30 பேர் காயம்

பள்ளிபாளையத்தில் 30க்கும் மேற்பட்டோர் தெரு நாய் கடித்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டாக உலாவும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தியும், சில நேரங்களில் காயப்படுத்தியும் வருகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தெருநாய்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிறன்று காலை பெரியார் நகர், ஆவரங்காடு, காந்திபுரம், நான்காவது கிராஸ், ஆர்.எஸ்.சாலை என பல்வேறு இடங்களில் சுமார் 30க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்தது. காயமடைந்த அனைவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் சண்முகசுந்தரம் என்பவரின் கைவிரலை தெரு நாய் கடித்துக் குதறியதில் கைவிரல் பலத்த சேதம் அடைந்தது. ஒரேநாளில் 30க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நாயை நகராட்சி நிர்வாகத்தினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர்.