நாகர்கோவில், டிச. 5 - மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை தலைவரும், முன்னாள் தொலைதூர கல்வி இயக்ககத்தின் இயக்குநருமான பேரா.ஜோ.தியாகராஜன் நவம்பர் 29 அன்று நாகர்கோவிலில் காலமானார்.
அவருக்கு வயது 72. வரலாற்றுத் துறையில் பல புத்தகங்கள், குறிப்பாக ‘சீனா வரலாறு - முன்னேறும் பாதை’ போன்ற புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியவர். நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பில் மாணவர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர். முனைவர் ஜோ.தியாகராஜன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பை உருவாக்கி தென் இந்திய வரலாற்று ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டவர்.
இவர், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றத்திற்கு (மூட்டா) ஆரம்ப காலம் முதல் தனது பங்களிப்பை வழங்கியவர். டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வு நிறுவனங்களில் தனது பங்களிப்பை வழங்கிய இவர், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மகன் முனைவர் தி.ராஜ்பிரவின், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, விரிவாக்கத்துறையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பேரா.தியாகராஜன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மூட்டா அமைப்பின் தலைவர்கள் பேரா.மனோகர ஜஸ்டஸ், பேரா.நாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது மறைவுக்கு காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.