districts

முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்ற விரைவில் அனுமதி; மாவட்ட ஆட்சியர் உறுதி

நாகர்கோவில், டிச. 7- முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்ற விவசாயிகள் முற்படும்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற கால தாமதம் ஏற்படுவதை குறைக்க வழிமுறைகளை எளிமையாக்கி விரைவில் அனுமதி வழங்க வேண்டிய நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் டிச.5 வியாழனன்று நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டார்.  மாநாட்டில் அவர் பேசியதாவது:  தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே  ரப்பர் பயிரிடப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் உள்ள அதிக மழைபொழிவு மற்றும் அதிக ஈரப்பதம் ,அதிக பால் உற்பத்தியுடன் ரப்பர் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் சாகுபடியின் மொத்த பரப்பளவு 29060 எக்டர் ஆகும். மேல்புறம் வட்டாரத்தில் 9580 எக்டர், திருவட்டார் 9599 எக்டர், தக்கலை 4901 எக்டர் மற்றும் தோவாளை வட்டாரத்தில் 1648 எக்டர் ரப்பர் பயிரிடப்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி செய்யும் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 43 415 ஆகும். அதில் 43 374 சிறு மற்றும் குறு விவசாயிகள் 21681 எக்டர் பரப்பளவில் ரப்பர் உற்பத்தி செய்கின்றனர்.

 சுமார் 41 பெரு விவசாயிகள் 7373 எக்டர் பதிவு செய்யப்பட்ட தோட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். இந்தியாவில் 6,40,000 டன்கள் உற்பத்தியுடன் இயற்கை ரப்பர் உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  இந்தியாவின் உற்பத்தியில் கேரளம் 85 சதவிகிதமும் தமிழ்நாடு 4 சதவிகிதமும் திரிபுராவை தொடர்ந்து பங்களிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரப்பர் பால் மற்றும் ரப்பர் சீட்டுகளை விற்பனை செய்யும் போது அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க ஆவன செய்யப்படும்.

மேலும் ரப்பர் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.  இந்நிகழ்ச்சியில் ரப்பர் கழக நிர்வாக மேலாளர் எம்.வசந்தகேசன், ரப்பர் உற்பத்தி இணை ஆணையர் சிஜூ, ரப்பர் உற்பத்தி கழக ஆணையர் சாலி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், ரப்பர் கழக அலுவலர்கள், ரப்பர் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.