நாகப்பட்டினம், ஜூலை 27- நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு, அரசு உதவி கேட்டு மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் பரவை காய்கறி சந்தையில் இட்லி வியாபாரம் செய்து வந்த 42 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில், அனைத்திந்திய மாதர் சங்கம் தலையிட்டு 500-க்கும் மேற்பட்டோரை திரட்டி, பரவை காய்கறி சந்தையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இதன் எதிரொலியாக, வன்கொடுமை மற்றும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் ஒரத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் அப்பெண்ணின் 17 வயது மகளும் பாதிக்கப்பட்டுள்ளார்.
மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண், இனிமேல் இயல்பான நிலையில் மீண்டும் கூலி வேலைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே அப்பெண்ணுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ஊதியம் கிடைக்கும் வகையில் அல்லது வாழ்வாதாரத்திற்கு போதுமான வகையில் அரசிடமிருந்து நிதியுதவி வேண்டும். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற மேல்நிலை இரண்டாம் வகுப்பு படிக்கும் அவருடைய மகளின், கல்விச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் என கோரி மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்ட பொருளாளர் எஸ்.சுபாதேவி, மாவட்ட துணைச் செயலாளர் சி.மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.