மன்னார்குடியின் தேரடியில் மாலை வெயில் சாய்ந்து கொண்டிருந்தது. அமித் ஷாவின் அம்பேத்கர் விரோதப் பேச்சுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன முழக்கங் கள் வானைப் பிளந்தன. அந்த நேரத்தில்தான், நாற்கால் கம்பத்தை ஊன்றியபடி ஒரு மூதாட்டி மெதுவாக நடந்து வந்தார்.
வயதின் சுமையால் உடல் தளர்ந்திருந்தாலும், அவரது கண்க ளில் ஒரு வேக்காடு தெரிந்தது. போராட்டக் குரல்களை கேட்டதும் அவரது காதுகள் கூர்மையாயின. தன் பயணத்தை நிறுத்தி, ஆர்ப்பாட் டத்தை உற்று நோக்கினார். அருகே வந்த தீக்கதிர் செய்தியாளரிடம், “என்ன தம்பி இது என்ன போராட்டம்?” என்று வினவினார். “அம்மா, நாடாளுமன்றத்தி லேயே டாக்டர் அம்பேத்கரை அவ மதித்து பேசிய அமித் ஷாவுக்கு எதி ரான கண்டன ஆர்ப்பாட்டம்” என்ற தும், அவர் முகத்தில் கோபம் படர்ந்தது.
“பிஜேபிக்காரங்களா? அம்பேத்கர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லாதவங்க!” என்று சீறினார். “நானும் இந்தப் போராட்டத் தில் கலந்துக்கலாமா தம்பி?” என்று கேட்டார். அந்த மூதாட்டியின் உணர்வு பூர்வமான கேள்வி செய்தியாளரை நெகிழ வைத்தது. அவரது கரம் பற்றி, சாலையைக் கடந்து போராட்டக் களத்திற்கு அழைத்துச் சென்றார்.
“என் பெயர் ஆர். சுந்தராம்பாள். வயசு 89. திருத்துறைப்பூண்டி என் சொந்த ஊரு” என்று தன்னை அறி முகப்படுத்திக் கொண்டார். “எங்க ஊரு கம்யூனிசத்துக்கும், போராட் டங்களுக்கும், தியாகங்களுக்கும் பேர் போனது. சீனிவாசராவையும், மணலி கந்தசாமியையும் தெரியுமா உங்களுக்கு? மணலியார் குடும் பத்தை சேர்ந்தவள்தான் நான்”. அவர் பேசும்போது, அவர் குர லில் பெருமையும் உறுதியும் தொனித்தன. “இந்த கம்யூனிஸ்டு கள் போட்ட கோஷம், செங்கொடி - இதுதான் இப்போ என்னை நிற்க வைத்தது” என்றபோது அவர் கண்களில் நெகிழ்ச்சியின் ஈரம் மின்னியது. இந்தியா முழுவதும் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களைப் பற்றி கேள்விப்பட்டதும், “அதுதான் சரி!” என்று உறுதியாக ஆமோதித்தார்.
அருகில் நின்றிருந்த இளம் காவலர் ஒருவர், அந்த மூதாட்டியின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் கண்டு நெகிழ்ந்து, அவரை பாது காப்பாக வழி நடத்திச் சென்றார். வயது முதிர்ந்தாலும், காலங்கள் கடந்தாலும், அவர் இரத்தத்தில் கலந்திருந்த செங்கொடியின் சாட்சியம், அன்று மன்னார்குடி தெருக்களில் மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்தது. போராட்டங்களின் பாரம்பரியமும், கொள்கை உறுதி யும் தலைமுறைகளைக் கடந்து நிற்பதற்கு அவர் ஓர் உயிரோவிய மாக நின்றார். மூதாட்டி சுந்தராம்பாளின் அந்த உணர்வுபூர்வமான பங்கேற்பு, சமூக நீதிக்கான போராட்டத்தில், வயதென்பது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்தது. அவரது வாழ்க்கை வரலாறு - திருத்துறைப் பூண்டியின் போராட்ட வரலாற் றோடு பின்னிப் பிணைந்த அந்த நேர்மையான வாழ்வு - இன்றும் நம்பிக்கையின் சுடராக ஒளிர்கிறது. - பி. தட்சிணாமூர்த்தி