districts

img

விவசாயிகளிடம் காய்கறிகளை கொள்முதல் செய்து உழவர் சந்தையின் அடிப்படை நோக்கத்தை மீட்டெடுத்திடுக

மதுரை, அக்.15- உழவர் சந்தையின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிற இத்தருணத்தில், விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து, உழவர் சந்தையின் அடிப்படை நோக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உழவர் சந்தை திட்டத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு வெள்ளி விழா அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தின் அசல் நோக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1999 நவம்பர் 14 ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் மதுரை அண்ணா நகரில் துவக்கப்பட்ட இத்திட்டம், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வசதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான உழவர் சந்தைகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி, ‘வியாபாரிகள் சந்தைகளாக’ மாறிவிட்டதாக சங்கத்தின் தலைவர் எஸ்.இரத்தினவேல் கவலை தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்பவர்கள் காய்கறி மொத்த மார்க்கெட்டில் வாங்கிவந்து தான் விற்பனை செய்கிறார்கள். இது திட்டத்தின் அசல் நோக்கத்திற்கு முரணானது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் வெள்ளி விழா ஆண்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் டாக்டர் கலைஞர் கொண்டிருந்த அசல் நோக்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், பொதுமக்களுக்கு பசுமையான (farm fresh) காய்கறிகள், பழங்கள் நியாயமான விலையில் கிடைக்கும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது.