கிருஷ்ணகிரி,டிச.2- பெஞ்சால் புயலின் தாக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 50.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் கரையை கடந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ஒரே நாளில் 50 செ.மீ கனமழை பெய்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதியில் இருக்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பியது. ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீ பெருக்கெடுத்து ஓடி சாலைகளை மூடி அப்பகுதியைத் தனித்தீவாக மாற்றியுள்ளது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களை மழைநீர் இழுத்துச் சென்றது. இதனையடுத்து தங்களது வாகனங்களை உரிமையாளர்கள் மிகவும் சிரமத்துடன் மீட்டு வருகின்றனர்.
ஊத்தங்கரையில் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள், ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிறகு, பெரிய பெரிய இயந்திரங்கள் கொண்டு வந்து வானங்களை ஒவ்வொன்றாக மீட்டனர். ஊத்தங்கரை வட்டத்தை புரட்டியெடுத்த கனமழை, போச்சம்பள்ளி வட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் ஏரி,குளங்கள் நிரம்பியது. வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் பாதித்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.