கிருஷ்ணகிரி, ஜூன் 27- கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்டது சிவானந்தபுரம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளதாகவும் அதனை சுத்தப்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு குழாயில் வரும் தண்ணீரை நம்பியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையுள்ளதாக தெரிகிறது. மேலும் எரியாத மின்விளக்குகள், போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள், தெருவில் ஓடும் சாக்கடை என்று எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று (ஜூன் 27) வெங்கடாபுரம் சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில்ல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜா கடை காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.