districts

குடிநீர் விநியோகிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் மனு

கரூர், ஆக.9 - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டம் சார்பில் குடிநீர் விநியோகிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.முருகேன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், கரூர் மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். “கரூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோக பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஒப்பந்ததாரர் மூலம் ரூ.7300 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவாக ஊதியம் உள்ளது. இப்பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, வருகை பதிவேடு என எதுவும் பராமரிப்பதில்லை. நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியில் உள்ள தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அமலாக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிற இத்தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, கண்ணியமான வருமானம் உள்ளிட்டவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோக பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் அமலாக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.