districts

img

மாவட்ட எல்லையில் தொடரும் அத்துமீறல்: உணவுக்கழிவுகள் நூதன முறையில் கடத்திவந்த இருவர் கைது

குழித்துறை, டிச.23- குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புழுக்கள் நெளியும் உணவு  கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு  டேங்கர் வாகனங்களை போலீசார் சிறைப்பிடித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேக ரிக்கும் கழிவு பொருட்களை வாகனங்களில் ஏற்றி வந்து  தமிழகத்தின் குமரி, நெல்லை. தூத்துக்குடி.தென்காசி.தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்களில் கொட்டி செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இவ்வாறு வரும் வாகனங்களை சிறைபிடிக்கும் பணியில் தமிழக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறன்று  கேரளத்தில் இருந்து கோழி இறைச்சி கழிவு கள் ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் சிறைப்பிடித்து இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில்  மீண்டும் கேரளாவில் இருந்து மனித கழிவுகளை சேகரித்து எடுத்து செல்லும் செப்டிக் டேங்க் வாகனம் ஒன்று புழுக்கள் நெளியும் உணவக கழிவுகளை ஏற்றிக்கொண்டு களியக்காவிளை சோதனை சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்குள் நுழைந்தது. இதனை பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை ஓட்டி வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்ட தேவா 25, வள்ளி முருகன் 43 என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளத்தில் இருந்து கழிவு பொருட்களை தமிழகத்திற்குள் கொண்டு வரக் கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை  செய்தும் அதனை கண்டுகொள்ளாமல் கழிவுகளை கொண்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.