அருமனை, டிச. 3 - கன்னியாகுமரி மாவட்டம் எல்லையோரப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஒருபுறம் வன விலங்குகளின் அட்டூழியமும், இன்னொரு புறம் இயற்கையின் சீற்றமும் இப்பகுதி மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் ஆறுகாணி அருகே கேரளா பகுதியில் அம்பூரி பஞ்சாயத்தில் உள்ள தொடுமலை வார்டில், சாக்கபாறைக்கு அருகே உள்ள வனப்பகுதியான கைபன்பிலாவிளை பழங்குடியினர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 3 பாறைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக வீடு மற்றும் மனித உயிர்க்கு ஆபத்து ஏற்படவில்லை.
என்றாலும், விவசாயிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தங்கப்பன் காணி, ராஜேந்திரன் காணி ஆகிய இருவரது விளைநிலங்களில் தற்போது ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் மரங்கள், செடி, கொடிகள் மற்றும் விவசாயம் முற்றிலும் நாசமானது.
இது தமிழக, கேரள எல்லையான வனப்பகுதியில் நடந்துள்ளது. இச்சம்பவம் நடைபெற்று ஐந்து நாட்களான பின்பும் எந்த அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.