districts

img

அணுக்கனிம திட்டத்துக்கு பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி,செப்.19-  கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் அமையவிருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கதன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியிக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள 75 கடலோரக் கிராமங்களில் ஏறத்தாழ 50 கிராமங்கள் ஏற்கெனவே தாதுமணல் கொள்ளையால் பாதிப்படைந்துள்ளன. குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடியதாக இருந்த கடற்கரையின் நிலை மாறி, இன்று பல கிராமங்களில் கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் கடலரிப்பு அதிகமாகிவிட்டது.
கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. கடற்கரையும் கடலோரத் தாவரங்களும் அழிக்கப்பட்டதால் இனப்பெருக்கத்திற்காக நிலத்தையும் உணவிற்காகக் கடலையும் நம்பி வாழும் இருவாழ்விகளான ஆமைகள் இக்கடலோரத்தின் பல பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவதை நிறுத்திவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழுக்க முழுக்க கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்கம் நிறைந்த மணற்பகுதியை அகழ்வதால் கதிரியக்க பாதிப்பு அதிகம் நேர்கிறது. கூத்தன்குழி, மனவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம்பேர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயர கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.