குழித்துறை, டிச.23- மார்த்தாண்டம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகவும், 4 முறை குழித்துறை நகர்மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் முருகன். அவர் நந்தன்கோடு கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார்.
இவரது சமூகப் பணியின் ஒரு பகுதியாக, 10-11-2009 இல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தனது உடலை தானம் செய்திருந்தார். மரணத்துக்குப் பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்படைக்கும் வழிமுறைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்திருந்தார்.
அதன்படி அவரது மகள்கள் அவரது உடலை டிச.23 திங்களன்று மருத்துவக்கல்லூரியில் ஒப்படைத்தனர். முன்னதாக அரவிந்த் மருத்துவமனை க்கு அவரது இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் குமரி மாவட்டசெயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவரது உடலுக்கு மார்த்தாண்டம் வட்டாரக் குழுச் செயலாளர் சர்தார்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அனந்தசேகர், மாவட்ட குழு உறுப்பினர் மோகன் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜூலியட் மெர்லின்ருத், விஜயலட்சுமி, நகரமன்ற முன்னாள் தலைவர் டெல்பின், மற்றும் வட்டார குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.