காஞ்சிபுரம்,டிச.3- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் மருதம் சிப்காட் பெயரில் புதிய தொழில் வளாகம் அமைக்கும் திட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. மருதம், திருப்புலிவனம், புலிவாய் உள்ளிட்ட பகுதிகளில் 750 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர்கள் - மாநில தலைவர் பெ.சண்முகம், மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், செல்வம், வி.கே.பெருமாள் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர். மனுவில், தமிழகத்தில் ஏற்கனவே 70 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ள நிலையில், முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்துவது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தரிசு நிலங்களில் தொழில் வளாகம் அமைக்கலாம். ஆனால் விளைநிலங்களை பாதிக்கக் கூடாது” என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏற்கனவே விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.